வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் உருவான ”நாடா” சூறாவளி இன்று இரவு யாழ். குடாநாட்டை அண்மித்து இந்தியாவை நோக்கி நகரவுள்ளதால் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியின் தாக்கத்தினால் காற்றின் வேகமும் அதிகரிக்கலாம் என அறிவறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து 480 கிலோமீற்றர் தொலைவில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த 12 மணித்தியாலங்களில் சூறாவளி வலுப்பெற்று, வடமேல் திசையில் யாழ். குடாநாட்டை அண்மித்து நகர்வதற்கான சாத்தியம் உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது
இதன் விளைவாக டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகத்தின் திருநெல்வேலி, நாகப்பட்டிணம், காஞ்சிபுரம், சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் துறைமுகம், பாம்பன் துறைமுகம், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் இரண்டாம் எண் சூறாவளி எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளதாக தமிழகத்திலுள்ள எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
நாடா புயல் காரணமாக சென்னை, நாகை, காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளையும் (01) நாளை மறுதினமும் (02) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர, விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூர் தாலுக்காவிலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பாடசாலைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
இன்றிரவு சூறாவளி சென்னையை அண்மித்து, ஆந்திராவின் ஊடாக நகரும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இதனால் அநேகமான மீனவர்கள் இன்று கடற்றொழிலுக்கு செல்லவில்லை என இராமேஸ்வரத்தில் உள்ள எமது செய்தியாளர்கள்
கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக