சாதாரண மனிதர்களை விடவும் உடற் குறைபாடுகளை உடையவர்கள் அதிசயிக்கும் வகையில் திறமைசாலிகளாக இருப்பதை நாம் அறிவோம்.அது அவர்களின் குறைகளை மறைப்பதற்காக இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பிரத்தியேக அருளாகும்.
உடலில் சிறிது குறைபாடு ஏற்பட்டுள்ள எத்தனையோ பேர் அதைக் காரணமாக் கொண்டு பிச்சையெடுத்து சோம்பறித்தனமாக வாழ்வதை நாம்
காண்கிறோம்.
ஆனால்,சிலர் அந்தக் குறைபாடுகளை வெற்றிகொண்டு தன் மானத்தோடு உழைத்து வாழ்கின்றனர்.தமக்கு குறைகள் இருப்பதையே அவர்கள் மறந்துவிடுகின்றனர்.சாதாரண மனிதர்களை விடவும் அசாதாரண திறமை படைத்தவர்களாக அவர்கள்
காணப்படுகின்றனர்.
அவ்வாறான ஒரு மனிதரை நாம் மட்டக்களப்பு மாவட்டம் புன்னைக்குடா கடற்கரையில் சந்தித்தோம்.அவர் இரண்டு கைகளையும் இழந்த 38 வயது நிரம்பிய மீனவர்.சாதாரண மனிதரை விடவும் மிகவும் திறமைசாலியான இவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அங்கு சென்று அவரைச் சந்தித்து உரையாடினோம்.
அவர் வழங்கிய சுவாரசியமான-அதிசயமிக்க தகவல்களை நாம் எமது வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
கேள்வி; உங்களைப் பற்றியும் உங்களுக்கு இந்த அனர்த்தம் ஏற்பட்டமை பற்றியும் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
பதில் : எனது பெயர் விநாயகமூர்த்தி லோகேஸ்வரன்.வயது 38.நான் ஒரு மீனவன்.எனது சொந்த இடம் கழுவாங்கேணி.எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்தப் புன்னைக்குடா கடலில்தான் நான் தொழில் புரிந்து வருகின்றேன்.
1995 ஆம் ஆண்டு மீன் பிடிக்காகப் படகில் சென்றுகொண்டிருந்தபோது மர்மப் பொருளொன்று மிதந்து வந்தது.அதை நான் எடுத்ததும் அது வெடித்துச் சிதறியது.அதனுடன் சேர்ந்து எனது கைகளும் பறந்துவிட்டன.அது கன்னி வெட்டியெனப் பிறகு அறிந்தேன்.
அன்று முதல் இன்று வரை இரண்டு கைகளும் இல்லாமலேயே நான் வாழ்ந்து வருகிறேன்.இருந்தும்,எனது வேலைகளை நானே செய்து வருகிறேன்.பிறரின் உதவியை நாடவில்லை.
கே:நீங்கள் இரண்டு கைகளையும் இழந்துள்ளபோதிலும்,கைகள் உள்ளவர்களை விடவும் மிகவும் திறமையாகச் செயலாற்றுவதாகக் கேள்விப்பட்டோம்.அது பற்றிக் கூறமுடியுமா?
ப:உண்மைதான்.மற்றவர்கள் பார்வையில்தான் நான் கைகள் இழந்தவன்.எனது பார்வையில் அப்படி இல்லை.எனக்கு கைகள் இல்லை என்பதை நான் உணர்ந்ததே இல்லை.இரு கைகளும் உள்ளவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் நான் செய்கிறேன்.இன்னும் சொல்லப் போனால் அவர்களை விடவும் அதிகமாகவே செய்கிறேன் என்று
சொல்லலாம்.
என்னால் மோட்டார் சைக்கிள் ஓட்டமுடியும்.படகைச் செலுத்த முடியும்.ஆடைகள் உடுத்த முடியும்.பாரம் தூக்க முடியும்.வாயின் உதவியால் எழுத முடியும்.உணவு உண்ணமுடியும்.
நான் ஒரு மீன் வாடியில் வேலை செய்கிறேன்.அங்குள்ள அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன்.சுருக்கமாகச் சொல்லப்போனால் அந்த முதலாளி அவரது வேலைகள் அனைத்தையும் என்னிடமே ஒப்படைத்துள்ளார்.பதில் முதலாளி போலவே நான்
செயற்படுகிறேன்.
கைகள் இல்லாவிட்டாலும் மிகவும் திறமையாக-கைகள் உள்ளவர்களை விடவும் நேர்த்தியாக என்னால் வேலை செய்ய முடியும் என்பதால்தான் அவர் முழுப் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார்.
லொறிகளுக்கு மீன் பெட்டிகளை ஏற்றுவது,அவற்றில் இருந்து இறக்குவது,கணக்குகள் பார்ப்பது,வங்கிகளுக்குச் சென்று பணம் வைப்பில் வைப்பது,எடுப்பது என இந்தத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன்.
கே:உங்களுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டமைக்காக நீங்கள் வருந்துவதுண்டா?
ஆரம்பத்தில் அந்த வருத்தம் இருந்தது.பிறகு கைகள் உள்ளவர்களைப்போல் என்னால் வேலை செய்யக்கூடிய ஆற்றல் வந்ததும் நான் வருந்துவதில்லை.இரண்டு கைகளும் இருப்பது போன்றே நான்
உணர்கிறேன்.
என்னால் சுமார் 80 வீதமான பணிகளைச் செய்ய முடிகின்றது.ஆதலால் எனக்கு எதுவித வருத்தமும் இல்லை.
கே:அந்த விபத்தின் பின்னர் உங்களின் தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதா அல்லது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
ப:எனது தொழிலை இது பாதிக்கவில்லை.ஆனால்,முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.என்னிடம் மீனவத் தொழில் அனுபவம் நிறையவே இருப்பதால் பணம் இருந்தால் என்னால் இத்தொழிலில் முன்னேற முடியும்.ஒரு முதலாளியாக
மாற முடியும்.
எனக்குத் தேவையாக இருப்பது மீன் ஏற்றக்கூடிய ஒரு வாகனம்தான்.அதை வாங்குவதற்கு யாராவது உதவி செய்தால் கைகள் இல்லாத நிலையிலும் என்னால் முன்னேற முடியும்.சாதித்துக் காட்டமுடியும்.உடற்குறைபாடுகள் முன்னேற்றத்துக்குத் தடை இல்லை என்பதை என்னால்
நிரூபிக்க முடியும்.
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்தோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தோ இந்த உதவியை நான் நாடி நிற்கின்றேன்.நல்லுள்ளம் படைத்தவர்கள் எனது முன்னேற்றத்துக்கு உதவ முன்வர வேண்டும்.
கைகள் இல்லை என்பதற்காக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தமாட்டேன்.கைகள் இல்லாமலும் சாதிக்கமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவேன்.அதற்காக இந்த உதவிகள் எனக்குத் தேவைப்படுகின்றன.-என்கிறார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக